மஹா சிவராத்திரி நோன்பினை பக்திபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஆலோசனை

0

மஹா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

சைவ மக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் (2021.03.11) வியாழக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இச்சிவராத்திரி நோன்பினை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் சைவத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

அதன்போது சைவ சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இந்நாளில், இந்து பக்தர்கள் மஹா சிவராத்திரி நோன்பினை பக்திபூர்வமாக அனுஷ்டித்து தெய்வீக அருள் ஒளி எங்கும் நிறைய வழிபாட்டில் ஈடுபடுவர்.

மஹா சிவராத்திரி விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கி வைக்கப்படவுள்ளது.