பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் தலைமையில் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும் சந்திப்பில் தமது கட்சி பங்கேற்கும் அதில் பேசப்படும் விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமருடனான சந்திப்பில் கட்சி பங்கேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது மற்றும் பிற விடயங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரிவித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் புறக்கணிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.