மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி

0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபத அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை குழுவுடன் நேற்று (வெள்ளிக்கிழமை)  இடம்பெற்ற சந்திப்பின்போதே அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

தொகுதி முறை, எல்லை நிர்ணயம், ஐம்பதுக்கு ஐம்பது சதவீத, பெண்களின் பிரதிநித்துவம் உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபு அவர்களினாலே தோற்கடிக்கப்பட்டுள்ளதோடு மாகாண சபைகள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதனை வீழ்த்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன.

மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தவறான பிரசாரங்களுக்கு பலியாகி கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு எவ்வளவு தூரம் பின்னடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவதோடு இந்த சக்திகள் அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்களையும் தோற்கடிகப்பதற்கு மீண்டும் முயற்சிக்கின்றன.

அதற்குப் பலியானால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.