மாகாண சபைத் தேர்தல் பிற்போனமைக்கு ’கூட்டமைப்பும் காரணம்’

0
உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் பேசப்பட்டுள்ளது.
இருப்பினும், மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாதென்று தெரிவித்த அரசாங்கம், இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் காரணமெனக் குற்றஞ்சாட்டியது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்இ மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சியின் போது, மாகாண சபை முறைமை, தேர்தல் முறைமை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், புதிய தேர்தல் முறைமையும் முரண்பாடான தன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியிலேயே மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தமது 16 ஆசனங்களை அப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்தினார்கள். ஆகவே, மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்தை எவரும் விமர்சிக்க முடியாது.
தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியில் தீர்வு காண்பது அவசியம்.  இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டவுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, நாட்டில் காணப்பட்ட தீவிரவாதம், பிரிவினைவாதத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு கோரியே, நாட்டு மக்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்தனர்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு  பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.