மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – சாணக்கியன்

0

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து தமிழ் கட்சிகள், மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், குறித்த கதவடைப்புப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், பூரண ஹர்த்தால் வெற்றியடைந்துள்ளமை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட பூரண ஹர்த்தாலுக்கு மாபெரும் ஆதரவு வழங்கியமைக்கு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய தினம் மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது. இது பலருக்கும் பாடம் புகட்டியுள்ளது. எமது ஒற்றுமையே எமது பலம். ‘எமது உரிமை எமது உணர்வு.’

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரம்பல் அச்சம் காரணமாக நான் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். இதன் காரணமாக அன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு என்னால் வர முடியாததை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன்.

அத்துடன், தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மயிலத்தமடு பண்ணையாளர்களை நேரில் சென்று பார்க்க முடியால் போய்விட்டதையும் எண்ணி வருந்துகிறேன்.

உங்கள் பிரச்சினையை நான் ஒரு போதும் கைவிடப்போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்வேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.