மாத்தளையில் ஒருவருக்கு கொரோனா: பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாத்தளை-பல்லேபொல,எஹேல்பொல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையின்போது அவரக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சேபாலி விக்கிரமதிலக்க மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர், மாத்தளை பொது  வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் கண்டி பொது  வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமையினால் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தற்போது பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்களது சொந்த வீடுகளிலேயே  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 2 குழந்தைகளும் கல்வி கற்கும் மாத்தளை மற்றும் கண்டியில் உள்ள இரண்டு கல்லூரிகளின் கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல்  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம்  தொடர்பாக  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஏதேனும் காய்ச்சல் அல்லது பிற நோய்களால் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக  வைத்தியசாலைக்குச் சென்று  சிகிச்சை  பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக  பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.