மார்பர்க் எனும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

0

மேற்கு ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கொவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோயின் இறப்பு வீதம் 88 ஆகும். கடந்த  2ஆம் திகதி தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இறப்பு விகிதம் குறித்த தகவல் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் மத்ஷிடிசோ மொய்தி கூறுகையில்,

“மார்பர்க் வைரஸ் நோய், மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, அதன் பரவலை கண்டறிந்து தடுக்க வேண்டும்.  எபோலா வைரஸை தடுக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கிடைத்த அனுபவங்களை கொண்டு புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்தாண்டு ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய எபோலா வைரஸ் நோய் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். எபோலா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய, பிராந்திய அளவில் மட்டுமே இது பெரும் அச்சுறுத்தலை தருகிறது என்றும் உலகளவில் இந்த வைரஸ் நோயின் தாக்கம் குறைவு என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  பொதுவாக, குகைகள் அல்லது சுரங்கங்கள், குடியிருப்பு காலணிகள் ஆகியவற்றில் இருக்கும் வெளவால்களிலிருந்து மார்பர்க் வைரஸ் நோய் பரவுகிறது. மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களின் உடலிருந்து வெளியேறும் வியர்வையிலிருந்து இது மற்றவர்களுக்கு பரவுகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.