மாவனெல்லையில் தொடரும் அசம்பாவிதங்கள் – துரிதப்படுத்தப்படும் விசாரணை

0

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல – ஹிகுல பகுதியிலுள்ள புத்த பெருமானின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தின் கண்ணாடி, அடையாளம் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல், இனவாத குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இதே புத்த பெருமானின் பீடத்திற்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னரும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மாவனெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மாவனெல்ல – அளுத்நுவர நகரிலுள்ள புத்த பெருமானின் பீடமொன்றில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ளவர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொண்டுள்ளதுடன், சி.சி.டி.வி காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், குறித்த குழுவினர் மாவனெல்ல பகுதியிலுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியிருந்தமை விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், மாவனெல்ல பகுதியிலுள்ள கல் குவாரியொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம், அரச புலனாய்வு திணைக்களம், இராணுவ புலனாய்வு பிரிவினர், பொலிஸார் என பல்வேறு கோணங்களின் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே, புத்தர் சிலைகளும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.