மாவனெல்ல பகுதியில் பெருமளவு வெடிப்பொருள் மாயம்

0

மாவனெல்ல – மொல்லிகொட பகுதியிலுள்ள கல் குவாரியொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து குழுக்கள் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கல் குவாரியிலிருந்து கடந்த 22ம் திகதி இரவு குறித்த வெடிப் பொருட்கள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அதிலிருந்த வெடிப்பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக, கல் குவாரியின் உரிமையாளர் மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய புத்த பெருமானின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் மாவனெல்ல பகுதியை மையமாக கொண்டு நடத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிப் பொருளுக்கு ஒத்ததான வெடிப் பொருட்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கல் குவாரியில் களஞ்சியப்படுத்தப்பட்ட 15 கிலோகிராம் நைட்ரேட், 6 டயினமைட் உள்ளிட்ட பெருமளவிலான வெடிப் பொருட்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது.