மிகப்பெரிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் காணப்படும் – மஹிந்த!

0

எதிர்காலத்தின் மிகப்பெரிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் காணப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர அபிவிருத்தி  செயற்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டு  6 வருட காலம் நிறைவுப்பெற்றுள்ள நிலையில் பிரதமர் நேற்று(வியாழக்கிழமை) கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளை பார்வையிட்டார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2014 செப்டெம்பர் 17 ஆம் திகதி சீன ஜனாதிபதியுடன் இணைந்து  கொழும்பு துறைமுக நகர  செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நேற்றுடன் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்கள் நிறைவுப்  பெற்றுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் ஒரு சில முறையற்ற செயற்பாடுகளினால் அபிவிருத்தி நிர்மாணிகள் இரண்டு வருட காலம் தடைப்பட்டன.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நிர்மாண அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தின் மிக பெரிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு துறைமுக  நகரம் காணப்படும்.

8000 தொழில்வாய்ப்புக்களை இலங்கை பிரஜைகள் இத்திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான மொத்த முதலீடு 15  பில்லியன் அமெரிக்க டொலர்களாக  கணிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி  பணிகளை துரிதமாக முன்னெடுக்கும் சீன நிறுவனத்துக்கும், சீன அரசாங்கத்துக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநரேம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி  சீனாவின் தேசிய தினமும், சீனாவின்  கம்யூனிச கட்சி  ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடமும்   கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு இலங்கை  அரசாங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.