நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்வெட்டு ஏற்படாது என்பதோடு எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படாது என்பதை மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போன்று மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கப்பட மாட்டாது.
இரண்டு புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். 2023 ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை மேலும் குறைக்கவே எதிர்பார்த்துள்ளோம்.
இன்னுமொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினையும் ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நிலக்கரி மின்உற்பத்தியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் நூற்றுக்கு 60 வீதம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
வேறு எந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாதவாறு இலங்கை மக்களுக்கு பயன்கள் பெற்றுக்கொடுக்கபடுகின்றன. பல்வேறு பிரச்சினைகளுடனேயே நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். எனினும் அந்த சுமையை ஜனாதிபதி மக்கள் மீது திணிக்க விரும்பவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.