முன்னாள் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி 

0

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பேருந்து, முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள், மெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை அடிக்கடி எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வைரஸ் பரவலை தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்பரிந்துரைகளின் படி பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு விரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசாக்களையுடைய 3 ஆயிரத்து 297 பேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது நாட்டுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன், கிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக விலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீடுகளில் இருக்க வேண்டியிருந்ததால் நகரப்புர மக்களின் வாழ்க்கையிலும் பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு சுகாதார பரிந்துரைகளின் படி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கிய செயற்பாடுகளையும் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

தரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதை விரைவுபடுத்த முடியுமா என்று ஜனாதிபதி வினவினார்.

விவசாய அறுவடைகளை நீண்ட நாள் வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறும் ஜனாதிபதி செயலணியிடம் தெரிவித்தார்.