முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ளவில்லை.
இம்முறை பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்த பலருக்கு இம்முறை அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை.
இவர்களில் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, எஸ்.பி.திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, சந்திம வீரக்கொடி, கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோரும் அடங்குகின்றனர்.
அத்தோடு, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மஹிந்த யாப்பா அபேவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜயரத்ன ஹேரத், ஜகத் புஷ்பகுமார ஆகியோருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
துஷ்மந்த மித்திரபால மற்றும் ரோஹன திசாநாயக்க ஆகியோரும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை.
இதேவேளை, முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான சில உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி நாலக்க கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஷஷீந்திர ராஜபக்ஸ, ஜீவன் தொண்டமான் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.
அத்தோடு, தேசியப் பட்டியல் மூலம் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.