தாம் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கப் போவதில்லை எனவும் நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்குச் சேவையாற்றுவோம் என்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சூளுரைத்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்குத் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டுவது வேடிக்கையானது எனவும் 25 வருடங்களாக வரைபடங்களுடன் போராட்டக் காலங்களில் திரிந்தவர்கள் தாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேர்தல் காலம் வரும்போது பலர் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்வார்கள். அதனையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்கொள்கின்றார்.
நாங்கள் இவர் போன்று அநாகரிகமான அரசியலைச் செய்ய விரும்பவில்லை. அவர்களைக் குற்றம் சுமத்துவதற்குக் கூட விரும்பவில்லை. மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள் . எங்களது நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் கூடுதலாக வாழ்கின்றனர். அவர்களது வாழ்க்கைச் சுமையைக் குறைக்க நாங்கள் தற்போது களமிறங்கி இருக்கின்றோம். எனவே நாம் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்கப் போவதில்லை நிச்சயமாக வெற்றி பெற்று சேவையாற்றுவோம்” என்றார்.