முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு

0

ராஜீவ் காந்தி வழக்கில் சிறைவாசமிருக்கும் முருகனின் தந்தையார் வைரவப்பிள்ளை வெற்றிவேலு யாழ்ப்பாணத்தில் இன்று காலை காலமானார்.

யாழ்ப்பாணத்தில், பளை, இத்தாவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவரின் இறுதிக் கிரியை நாளை ( செவ்வாய்) காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை மோசமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக அவர் சிகிச்சைபெற்று வந்தார்.

தனது தந்தையுடன் வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்குமாறு தமிழகத்தில் சிறையில் இருக்கும் முருகன், தமிழக முதலமைச்சருக்கு அவசர மனு அனுப்பியிருந்தார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோய் காரணமாக பல ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில வாரங்களாக கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முருகன் அவசர மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், தனது தந்தையுடன் கடைசியாக ஒருமுறை வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பிற சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பின் மூலம் அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

ஆனால், தந்தையுடன் பேச முடியாத நிலையிலேயே தந்தை இன்று காலை தந்தை மரணமடைந்தார்.