முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

0

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்  தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில்  வாழ்ந்து வரும்நிலையில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.

நேற்று(செவ்வாய்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில்  இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக இவ்வாறான வெற்றிகளைக் குவித்து வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கணேஷ் இந்துகாதேவி தந்தையினை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே வசித்து வருகின்றார். கணேஷ் இந்துகாதேவியின் வெற்றியில் அவரது தாயார் படும் துன்பங்கள் மறைந்து போயுள்ளன.

இப்படியானதொரு தங்க மகளை நாட்டிற்கு தந்த கணேஷ் இந்துகாதேவியின் தாயாருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், கணேஷ் இந்துகாதேவி தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் வெற்றிகளைக் குவிக்க அனைத்து தரப்பினரும் அவருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.