முள்ளிவாய்க்கால்… தமிழர்களின் உணர்விலும் உதிரத்திலும் கலந்துள்ள ஒரு அறச்சொல்!

0

வீரம் செறிந்த மண்ணிலே பிய்தெறியப்பட்ட சதைகளும், சிந்தப்பட்ட இரத்தங்களும் இற்றை வரைக்கும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் கதைகளை காற்றோடு காற்றாகக் கூறிக்கொண்டு தான் இருக்கின்றன.

ஆம். அந்தக் கொடூரம் அரங்கேறி இன்றுடன் 11 வருடங்கள் கடந்து விட்டன… ஓர் இனமே திட்டமிடப்பட்டு கருவருக்கப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துவிட்டன… நீதி கேட்டு ஓலமிட்ட ஒரு கூட்டம், நிர்க்கதியாக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்டன…

இலங்கை மண்ணில் 30 வருட காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற யுத்தம் அமைதிக்குக் கொண்டுவரப்பட்ட தினமாக கருதப்படும் இதுபோன்றதொரு தினத்தில்தான், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இன்னுயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.

எனினும், இந்தத் தியாகத்திற்கான நீதி வெளிச்சம், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கோரி நிற்கும் கூட்டத்திற்கும் இதுவரை பாய்ச்சப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதியளித்த அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்களின் அரசியல் தீர்வாக 13 ப்ளஸை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அத்தோடு, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேசத்திற்கு உறுதியளித்திருந்தார். சர்வதேச நாடுகளும் இதனைத் தான் வலியுறுத்தின. இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேசத்தின் கோரிக்கையாகும்.

இதற்காக கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

ஏன், கடந்த நல்லாட்சி அரசாங்கம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, சர்வதேசத்தின் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதோடு, சர்வதேச பொறிமுறையிலான நீதி விசாரணையொன்று இலங்கையில் தமது ஆட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது.

ஆனால், இந்த உறுதி மொழிகளும், அழுத்தங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் பகல் கனவாக மட்டும்தான் இருந்து வருகிறது. இறுதி யுத்தத்தின்போது, இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் நீதிப் பேராட்டங்கள் ஒரு புறம்…

படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என நீதிப் போராட்டங்கள் ஒரு புறம்… யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசாங்கங்கள் மார்த்தட்டிக் கொண்டாலும், இராணுவத்தின் கெடுபிடிகள் வடக்கில் அதிகமாக உள்ளதாக மக்கள் போராட்டங்கள் ஒரு புறம்…

இவ்வாறு, ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் வாழ்க்கை என்பது போராட்டங்கள் சூழ் படலமாகத் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் அரசியல் ஓடையில் தமிழர்களின் அறப்போராட்டங்கள் எப்போது கலந்ததோ, அப்போதே இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் கோரி நிற்கும் குறைந்த பட்ச விமோட்சனத்தையேனும் வழங்க முடியாத திராணியற்ற நிலையில் தானா தமிழ் அரசியலும், இலங்கை அரசாங்கங்களும் இருக்கின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எது எப்படியோ, சூரியல் மேற்கில் மறைவது ஒன்றும் சூரியனின் வீழ்ச்சியாக எவரும் கருதிவிட முடியாது.

அதுபோன்றுதான் தமிழர்களின் இந்த உரிமைப் போராட்டங்களும்… இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் கிழக்கில், அந்தச் சூரியனின் ஒளிக்கதிர்கள் வானை நிச்சயம் அலங்கரிக்கும் என்பதுதான், ஒவ்வொரு தியாகத்திற்கு பின்னாலும் ஒழிந்திருக்கும் பெருங்கதை.

இதே நம்பிக்கையுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள எம் உறவுகளுக்கு எமது இதய அஞ்சலி…!