யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமையினால் அப்பகுதி தொடர்ச்சியாக பதற்றநிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் பொலிஸார் இதன்போது கைது செய்துள்ளனர்.
இதனால் குறித்த இரு செயற்பாட்டினையும் கண்டித்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் பழைய மாணவர்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்.பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் குறித்த நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.