முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கு, வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவோம் – சம்பந்தன்!

0

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கு, வீடுகளில் சுடரேற்றி, அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் இன்று(திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஓர் ஆறாத வடு என்று குறிப்பிட்டுள்ளது.

அதில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய எமது உறவுகளை எமது வீடுகளில் சுடர் ஏற்றி – அஞ்சலித்து அமைதியுடன் நினைவு கூறுவோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதிப் போரில் அரச படைகளின் பலவிதமான தாக்குதல்களினால் எமது உறவுகள் பலர் முள்ளிவாய்க்கால் மண்ணில் சாகடிக்கப்பட்டனர்.

சாட்சியங்கள் எதுவுமின்றி போர் விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் இந்த மண்ணில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போது தான் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

போரை உடன் நிறுத்தும்படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கோரினேன் என்றும் தெரிவித்துள்ள சம்பந்தன், தமிழ் மக்களுக்குப் பெரிய இழப்புகளைக் கொடுத்துத்தான் அரசு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என்றும் குறிப்பிட்டள்ளார்.

இந்த போரினால் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுதலைக்காக உயிர் நீத்த அனைவரையும் நாம் நினைவுக் கூறக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.