மேல் மாகாணம் முழுவதும் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 397 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 179 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களாகும். இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 93 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 33 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2 – 3 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய நேற்றைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய இந்த தொற்றாாளர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம்.
இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதனை தடுப்பதற்கு மக்கள் முடிந்தளவு வீட்டில் இருங்கள் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். மேல் மாகாணத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த அதுவே காரணம்.
வைரஸ் பரவலை தடுப்பதற்கு 7 நாட்கள் முழுவதுமான நாட்டை மூடிவிடுவதற்கு நேற்றைய தினம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தினால் நாட்டின் சாதாரண பொது மக்கள் முகம் கொடுக்கும் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷவினால் தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளாந்த ஊதியத்தில், சிறிய வர்த்தகங்கள் மூலம் வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இந்த முறையில் ஊரடங்கு அமுல்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தெரிவு செய்து தனிமைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பொது மக்களின் தினசரி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.