முஸ்லிம்களுக்கு இரு சட்டங்களா? – ஹேஷா விதானகே கேள்வி

0

நீதி அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும், ஏனைய முஸ்லிம்களுக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இரத்மலானையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் பிசிஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அமைச்சர் ஒருவர் அலைபேசி வழியாக அங்கிருந்த சுகாதார அதிகாரிகளுக்கு அழைப்பெடுத்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனக் கூறி அச்சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

“நாட்டில் இரண்டு சட்டங்கள் இருப்பதையே இது காட்டுகிறது. நீதி அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும், ஏனைய முஸ்லிம்களுக்கு மற்றொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துகிறார்.” எனவும் தெரிவித்தார்.