முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டின் அமைதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை.
நாட்டின் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது.
எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.