மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் உறைந்து போயுள்ளது உலகம்- யாழ். ஆயர்

0

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இறைமக்கள் தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கும் நிலையில், இன்றைய பயங்கரமான சூழலில் ஆழமான இறை விசுவாசத்தை உணர்த்தி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடய்ததைக் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது. உயரிழப்புக்கள் மலிந்து, பொருளாதாரம் நலிந்து சொல்லொணா வேதனைகளுடன் மனுக்குலம் முழுவதும் கல்வாரிப் பாதையில், கொல்கொதா மேட்டில் சிலுவை சுமந்து நிற்கின்றது. நிச்சயம் ஆண்டவரின் உயிர்ப்பு நம்மை மீட்கும்.

வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டு ஆலய வழிபாடுகளின்றி வாழும் நாம், எமது வீடுகளை ஆலயங்களாக மாற்றி குடும்ப செபங்களிலும், இறை தியானங்களிலும் ஈடுபட்டு இறை விசுவாசத்தை மேன்மேலும் ஆழப்படுத்த வேண்டும் என நன்றியோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசியல் ரீதியான பகைமைகளையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், மத ரீதியான பிரிவுகளையும் மறந்து, மன்னித்து மனிதநேயம் மிக்கவர்களாக ஒன்றிணைந்து, நாட்டு நலன், சமூகநலன், குடும்ப நலன் என்பவற்றை பேணிக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடின் அபாயங்களிலிருந்து நாம் மீண்டெழ முடியும்.

கொவிட்-19 தொற்று யாரால் பரவிற்று? ஏன் பரவிற்று போன்ற கேள்விகளை முன்வைத்து வெறுப்புணர்வுகளையும், குரோத உணர்வுகளையும், தேவையற்ற பொய்யான பரப்புரைகளையும் களைந்தவர்களாய் கொரோனாவை ஒழிக்க இறைவன் துணையுடன் செப தபங்கள் வழி ஒன்றுபட்ட மக்களாக வாழ்வோம்.

அபாயகரமான இவ்வேளையில் நமது நாட்டில் தன்னலங்கருதாப் பணிபுரியும் அர்ப்பணிப்பு மிகுந்த அனைத்து உள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூருகின்றேன். நமது நாடு, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பலரின் மனிதநேயப் பணிகளே காரணம் என்பதை நாம் நன்கறிவோம்.

நமது நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரச தரப்பினர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், பொலிஸ் உள்ளிட்ட முப்படையினர் அரச மற்றும் தனியார் நிர்வாகத்துறையினர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவிப்பதுடன் இறை ஆசீரையும் வழங்கி நிற்கின்றேன்.

கொரோனா தாக்கத்தால் உயிர் நீத்தவர்களின் ஆன்மா இறை சந்நிதானத்தில் நித்திய இளைப்பாறுதல் பெற பிரார்த்திப்பதுடன், நோய்வாய்ப்பட்டுள்ள அனைவரும் முழுமையாக சுகமடையவும் பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் எனது இறை ஆசீரை வழங்கி செபித்து நிற்கின்றேன். உயிர்த்த இயேசு கொணரும் அன்பும் சமாதானமும் உங்கள் குடும்பங்களில் என்றும் தங்குவதாக!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.