மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்த அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன

0

இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியடைந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த உண்மையை புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ள வேண்டும் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி முறையா அல்லது பிரதமர் ஆட்சி முறையா என்பது பிரச்சினையல்ல. அது அந்த நபரிடம் இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியை தழுவின.

இதனை நாமும் புரிந்துக்கொள்ள வேண்டும். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் முதலாவது ஜனநாயக தேர்தலிலேயே தோற்று போயினர். தற்போது 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

அதிகாரம் அல்ல இது தான் யதார்த்தம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். 77 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்கு வந்து, இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியை எப்போது தோற்கடிக்க முடியாது என நினைத்து விகிதாசார தேர்தலை அறிமுகம் செய்தார்.

இறுதியில் இந்த விகிதாசார தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு, அந்த கட்சி இல்லாமல் போயுள்ளது எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.