மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாதுகாக்க முயற்சிக்கும் அரசு:அமைச்சரவை மறுசீரமைப்பும் ஒத்திவைப்பு?

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தின் பிரதான தரப்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் தற்போது இலங்கை அரசியலில் பிரதான தலைப்பாக மாறியுள்ளது.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்காது, சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என அரசாங்கத்தின் தலைவர்களுக்கு அமைச்சர்கள் பலர் யோசனை முன்வைத்துள்ளதுடன் சில அமைச்சர்கள் அதற்கான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

இப்படியான நிலைமையில், நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படவிருந்த அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏதோ ஒரு விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலோ, அந்த கட்சியே அரசாங்கத்தில் இருந்து வெளியேறினாலோ, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும்.

முழு நாடும் நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தால் அரசாங்கம் ஆபத்துக்கு உள்ளாகலாம்.

இதன் காரணமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குள் தக்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒன்றிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கை சேர்ந்த முஸ்லிம் கட்சிகளின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஏற்கனவே அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் அவற்றின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதியூதீன் ஆகியோர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.

இந்த நிலையில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது.

முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க நேரிடும்.

அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக்கொண்டு, அமைச்சு பதவிகளையும் வழங்கினால், அரசாங்கம் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல கட்சிகளின் உறுப்பினர்கள் இருப்பதால், அவர்களுக்கு மத்தியில் அமைச்சு பதவிகள் பகிரப்பட வேண்டும்.

இதற்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வகித்த பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சு பதவிகள் எதுவுமின்றி இருந்து வருகின்றனர்.

அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின் போது தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படியான அரசியல் சூழ்நிலையில், அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி ஏதாவது ஒரு கட்சியை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பதாகும்.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எனினும் நாட்டில் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இப்படியான பின்னணியில் அமைச்சு பதவிகளை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அது அரசாங்கத்திற்கு எஞ்சியிருக்கும் ஆதரவையும் இல்லாமல் செய்துக்கொண்டதாக அமைந்து விடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.