ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேல் மாகாண ஆளுநர் மாஷல் ஒப் த பீல்ட் ரொஷான் குணதிலக இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு தொழிற்துறைகளுக்காக தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் மாஷல் ஒப் த பீல்ட் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார்.
மீண்டும் வீடுகளுக்குச் செல்வதற்கு வசதிகள் இன்மையால் இவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய உரிய நடைமுறையூடாக இவர்கள் விரைவில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் ஆளுனர் அறிவித்துள்ளார்.