எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரை,நாட்டை முழுமையாக முடக்காவிட்டாலும் குறைந்தது மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை மட்டுப்படுத்துமாறு, சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறில்லை எனில், மேல் மாகாணத்துக்குள் பயணத்தடை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உற்சவ காலம் அடுத்த வாரமளவில் ஆரம்பமாவதால், மக்களை கட்டுப்படுத்த முடியாத வகையில், தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதாகவும் இப்பயணங்கள் சுகாதார பரிந்துரைகளுக்கு அமையாமல் இருக்குமாயின் அப்போது, கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் இதுதொடர்பான இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் எதிர்வரும் நாள்களில் அரசாங்கத்திடம் இதுதொடர்பில் தெளிவுப்படுத்தலை முன்வைக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக மேல் மாகாணத்தில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார அதிகாரிகள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தலைமையில், சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த விடயம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.