மேல் மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேற முடியாது- உடனடி உத்தரவு!

0

கொரோனா தொற்றாளர்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுவரும் மேல் மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்தில் இருந்து எந்தவொரு நபரும் வெளியேற முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான செயலணி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணித்திருந்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரையும் அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான செயன்முறையைக் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, COVID-19 நோயாளிகளையும் தொற்றுநோயற்ற நோய்களிலிருந்து பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.