மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு – பிரதமர் மோடி

0

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், மேலும் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(செவ்வாய்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை புரிந்து கொண்டுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் இராணுவ வீரர்களை போன்று செயல்பட்டு வருகின்றீர்கள்.

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டில் இருந்து கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம்.

சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு பாதிப்பு இருந்தது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். ஊரடங்கும் சமூக விலகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியா எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளை பிற நாடுகள் பாராட்டியுள்ளன. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.