யாழில் இருந்து திருகோணமலைக்கு கடல் வழியாக அழைத்துவரப்பட்ட 10 பேர் – உண்மையில் நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு 10 மீனவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு மாதகாலமாக தங்கியிருந்த நிலையில் பொலிஸார் அவர்களை கடல் வழியாக அழைத்துவந்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, கணவர் மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றதாகவும், அவர் ஒரு மாத காலமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என மீனவரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதையடுத்து, திருகோணமலை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்பரப்பில் இருந்து திருகோணமலைக்கு மீனவர்களின் மூன்று படகுகள் எடுத்துவரப்பட்டன.

திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை சுங்க இறங்குதுறைக்கு கடற்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த படகுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்குக் கொண்டுவரப்பட்டது.

பதுகே, சதெவ் புதா, செனெதி எனப் பெயரிடப்பட்ட அப்படகுகளே திருகோணமலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

குறித்த படகுகளில் கடற்றொழிலை மேற்கொள்வதற்காகச் சென்ற திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 10 மீனவர்களும் திருகோணமலையிலிருந்து கடற்படையினரால் குறித்த படகுகளில் அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் ஆரம்பக் கட்ட வைத்தியப் பரிசோதனைக்குப் பின்னர் துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றபோதிலும், அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்றொழிலை மேற்கொள்வதற்காக திருகோணமலையைச் சேர்ந்த மீனவர்கள் யாழ். மயிலிட்டிக்குச் சென்று அங்கு தங்கியிருந்து தொழிலை மேற்கொள்வது வழக்கம்.

இருப்பினும் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற குறித்த மீனவர்கள் ஊரடங்கு சட்டக் காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்திற்கு வரமுடியாத சூழ்நிலை காணப்பட்டதன் காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த செய்தி சேகரிப்பின்போது செய்தியாளர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸாரால் பலதடவைகள் இடையூறுகள் ஏற்படுத்தியதுடன் துறைமுக வாயிலில் இருந்து இறங்குதுறைக்கு குறித்த படகுகளைக் கொண்டுவருவதற்கு சுமார் 5 மணிநேரம் தாமதமாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.