யாழில் தாவடி கிராமம் முற்றாக முடக்கம்!

0

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றார். இதனடிப்படையில் 1,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரியாலை பகுதியில் மட்டும் 192 பேரும் 80 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றது. அதேபோல், கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, மேலும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதால் நோய் பரவலை தடுக்கலாம். அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். தமக்குத் தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலர் ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன் அத்தியவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் பிரதேச செயலர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. மேலும் பிரதமர் ஊடாக மாவட்டத்திற்கு ஒரு மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும். மக்கள் விழிப்பாக இருப்பதுடன் நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.