யாழில் மோசடிகளை தடுக்க பிரதமரின் விசேட அதிகாரி

0

2015 தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து அம்பாந்தோட்டைக்கு திரும்பிய போது அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர். அதனால் அவரோடு கூட இருந்தவர்கள் பலர் உடனடியாகவே மைத்திரி பக்கம் தாவினர்.

அவர்களைப் பொறுத்தவரை, தமது அரசியல் பதவிகள் முக்கியமானவையாக இருந்தன. எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக ஜனாதிபதியாக எல்லாம் இருந்து அரசியலில் “ஒன்றும் இல்லாத” ஆளாகவும் மஹிந்த காட்சி தந்த அந்தக் காலத்திலும் கூட, அவரை விட்டு நீங்காமல் கூடவே இருந்தவர்களில் இருந்த வாலிபரும் ஒருவர் என தமிழ் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

2004ஆம் ஆண்டளவில் க.பொ.த உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியடியைச் சேர்ந்த வாலிபனான கீதநாத் காசிலிங்கத்திற்கு அதே தரத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்த நாமலுடன் ஏற்பட்ட தொடர்பு இருவருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பை தோற்றுவித்திருந்தது.

அப்போது நாமல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் மகன். அவ்வளவு தான். பின்னர் 2010இல் நாமல் முதன் முதலாக நாடாளுமன்றம் சென்ற பின்னர், அவரின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டார் கீதநாத்.

2015இல் மஹிந்த – நாமல் குடும்பத்தோடு கூடவே இருந்த கீதநாத், நாமல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகிய போது அவரின் தனிப்பட்ட பணிக்குழாமில் ஆய்வாளராக இருந்தார். மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் 2019இல் பிரதமரான போது அவரின் இணைப்பு செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது எதிர்கால அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தியிருப்பது நாமலைத்தான் என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. ராஜபக்ஷர்கள் எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ் வாக்குகளை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்ததில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைத் தனது எதிரணி வேட்பாளருக்கு கிடைக்காமல் பண்ணுவதில் செலுத்தும் அக்கறையை அந்த வாக்குகளைத் தமக்குப் பெறுவதில் அவர்கள் காட்டுவதில்லை.

ஆனால் நாமல் போட்டியிடுகின்ற போது அப்படி இருக்கக்கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே மஹிந்த கவனம் செலுத்தி வருவதை கவனிக்கலாம். அதனாலேயே நாமலும் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து மக்களின் மன நிலையை அறிந்து கொள்வதுடன், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் அக்கறை காட்டி வருகின்றார்.

நாமலின் அரசியல் பாதையை தனியாக வடக்கில் உருவாக்க மஹிந்த தெரிவு செய்திருப்பது, தமது குடும்பத்தில் ஒரு பிள்ளை போன்ற இந்த கீதநாத் என்ற இளைஞனைத் தான் என்பது அண்மைய காலங்களில் நடக்கும் விடயங்களை அவதானிக்கின்ற போத தெரிகிறது. முதலில் வடக்கின் விடயங்களைக் கவனிக்க பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த கீதநாத் இங்கு நடக்கும் தில்லுமுல்லுகளை அடையாளம் கண்டு தீர்த்துவைக்க முயன்று வருகின்றார்.

சாவகச்சேரியில் வீட்டுத் திட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அங்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலை மாற்றியமைத்து அதிரடி காட்டினார்.

இது தொடர்பான செய்திகள் வெளிவந்த பின்னர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்த நாமலிடம் இந்த விடயத்தை குறித்த அரசியல்வாதி முறையிட்டாரெனவும் தெரியவந்தது. அவ்வாறு அவர் முறையிட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், புனர்வாழ்வு போன்ற விடயங்களுக்கும் பொறுப்பான தனது பிரதிநிதியாக பிரதமர், கீதநாத்தை மேலதிக பொறுப்புக்களுடன் நியமித்திருக்கிறார்.

இந்தச் செய்தி அந்த அரசியல்வாதிக்கு விடுக்கப்பட்ட செய்தியாகவே தெரிகின்றது. நாமல் அரசியலில் இளையவர் என்றாலும், அரசியல் என்றால் என்ன என்பதை மிக ஆழமாக தெரிந்து கொண்ட அரசியல் ஞானி ஒருவரின் புதல்வர். அவரை குறைத்து மதிப்பிட முடியாது. இங்குள்ள அங்கஜனோ, டக்ளஸ் தேவானந்தாவோ தமக்கென வாக்கு வங்கிகளை வைத்திருந்தாலும், அது அவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது மாத்திரமே பிரதிபலிக்கும்.

அதுவும் அவர்கள் தமது வாக்காளர்களுக்கப் பெற்று வழங்கும் சலுகைகள் தொடர்வதைப் பொறுத்தது. ஆனால் அவர்கள் “இருவருக்கு போடுங்கள்” என்று ஒருவரை கை காட்டினால் அவர்களின் ஆதரவாளர்கள் இவர்கள் கை காட்டும் அந்த ஒருவருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பது கடந்த தேர்தலில் நிரூபணமானது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்த அன்று இரவே, தனது கட்சி காரியாலயத்திலிருந்த மஹிந்த படத்தை இரவோடு இரவாக நீக்கி விட்டு, மைத்திரியின் படத்தைப் போட்டவர்களை நம்பி அரசியல் செய்ய நாமல் தயாராக இல்லை என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்துகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு பத்திரிகை, “நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமன்றி நிலை நாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்” – இது அரச நிர்வாகத்துக்கும் பொருந்தும். அரச நிர்வாக விவகாரங்கள் வெளிப்படைத்தன்மையாகப் பேணப்படுவதும் இதில் முக்கிய அம்சமாகும். இந்த இரண்டு அம்சங்களையும் புறக்கணித்து, உதாசீனம் செய்வதன் மூலம் தான் யாழ்ப்பாணத்தில் அமுல்பேபியின் எடுபிடிகளின் அதிகார அட்டகாசம் எல்லை மீறியது என்பது கண்கூடு என குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும்,

அதற்கு ஆப்பு வைக்கும் கைங்கரியம் ராஜபக்சர்கள் தரப்பில் இருந்தே – ஆடசிப்பக்கத்திலிருந்தே – ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கோடி காட்டி வந்தேன். அதை நிரூபிக்கும் முதல் சமிக்ஞை – தெளிவான சைகை – வெளிப்படையாக பகிரங்கமாகியிருக்கின்றது.

யாழில் வீடமைப்பு உதவி பெறுவதற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியலை பிரதேச செயலாளர்களை நியாயமான முறையில் தயாரிக்க விடாமல் தடுத்து, தனது பிரதேச எடுபிடிகள் கொடுத்த பட்டியலுக்கு – தமது ஆதரவாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு – அந்த வீடமைப்பு உதவித் திட்டங்கள் வழங்குவதற்கு அமுல்பேபி தரப்பு நடவடிக்கை எடுத்தமையை அடுத்து அது பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது தெரிந்ததே.

பிரதேச செயலாளர்கள் கொடுத்த பட்டியல்கள் கூட முறையற்ற விதத்தில் வெட்டி மாற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம், எங்க முறையிடுவது என்று தெரியாமல் அங்கலாய்த்த நிலையில் தான் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்துக்கான தனது தொடர்பாளர் ஒருவரை ராஜபக்ஷ அரசு நியமித்தது.

“அமுல்பேபி அண்ட கோ” பண்ணிய அடாவடித்தனங்களைக் கண்டு பிடித்து, பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் செய்து, சரியான பயனாளிகள் பட்டியலைத் தயாரிப்பது தான் அந்தத் தொடர்பாளரின் முதல் பணியாக இருந்தது.

அதனை அவர் கனக்கச்சிதமாக ஆரம்பித்திருக்கிறார். யார் மூலம் அடுத்தம் கொடுத்து இந்தத் திருகுதாளங்களை “அமுல்பேபி அண்ட் கோ” முன்னெடுத்ததோ அந்தத் தரப்பு மூலமே நியாயம் செய்யும் பணியை அந்த அலுவலர் மேற்கொண்டிருப்பது தான் இதில் முக்கிய திருப்பம். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கை.

இது தொடர்பில் சகல பிரதேச செயலாளர்களுக்கும் யாழ். அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான க.மகேசன் நேற்று சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.

பத்து இலட்சம் ருபா பெறுமதிக்கும் ஆறு இலட்சம் ரூபா பெறுமதிக்கும் இரண்டு ரக வீட்டுத் திட்டங்களை அமைக்கும் பயனாளிகளின் தெரிவு குறித்தது இந்தச் சுற்றுநிரூபம்.

இந்தத் தெரிவுகள் குறித்து தனக்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைமைக்கும், தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்ற உண்மையை இந்த சுற்றுநிரூபத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார் அரசு அதிபர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர் எம்.பியான அங்கஜன் இராமநாதன் என்றால் மற்றவர் வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் ஆவர்.

மாகாண ஆளுநரின் விசனம் இப்போது தான் கணக்கில் எடுக்கப்பட்டு கடைசியில் அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதை இந்தச் சுற்றுநிரூபம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கை, தெரிவான பயனாளிகளின் விவரம், அந்த பயனாளிகளை தெரிவு செய்தவதற்கு முன்னெடுக்கப்பட்ட புள்ளியிடல் திட்டம் போன்ற முழு விவரங்களையும் பிரதேச செயலகங்கள், சகல கிராம சேவையாளர்களின் அலுவலகங்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தோறும் பகிரங்கமாகத் தமிழில் காட்சியப்படுத்துவமாறு இந்தச் சுற்று நிரூபம் மூலம் அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு அப்பாலும் விடயம் உண்டு. இந்தப் பட்டியலில் தவறுகள், முறைகேடுகள் இருக்கின்றன என யாராவது கருதினால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கான படிவங்கள், விளக்கங்களையும் அந்த இடங்களில் காட்சிப்படுத்துமாறும் சுற்று நிரூபம் வழிப்படுத்துகின்றது. முறைப்பாடுகளை ஏற்று, மேன்முறையீடுகளை ஆராய்ந்து ஒவ்வொரு முறையீட்டுக்கும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது முன்னுரிமைப்படுத்த முடியாமை குறித்து தனித்தனியாக முறையிட்டவர்களுக்குப் பதிலளிக்கும் படியும் சுற்று நிரூபம் பணிக்கின்றது. அது மாத்திரமல்ல, பிரதேச செயலக மட்டத்திலான மேன்முறையீட்டில் தமக்கு நீதி கிட்டவில்லை என்று கருதுவோர் மாவட்ட மட்ட விசாரணைக்கும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அந்தச் சுற்று நிரூபம் தெரிவிக்கின்றது.

அதாவது இதற்குப் பின்னரும் பிரதேச செயலாளர்கள் அமுல்பேபியின் அழுத்தத்துக்கு அடிபணிந்து திருகுதாளத்துக்குத் துணை போனால், மாவட்ட மட்ட மேன்முறையீட்டு விசாரணையில் பதில் கூற வேண்டி வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கைள எல்லாம் வரும் 19ஆம் திகதிக்குள் ஒப்பேற்றி முடிக்கப்பட வேண்டும் என்று சுற்றுநிரூபம் பணித்துள்ளது.

அதாவது “அமுல்பேபி அண்ட் போ” வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவில் நடத்திய முறைகேடுகள் தொடர்பில் அடுத்த இரண்டு வாரத்துக்குள் நியாயம் செய்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுற்று நிரூபத்தில் ஒரே ஒரு குறைப்பாடு தான். பயனாளிகள் தெரிவில் இடம்பெற்ற முறைகேடுகள், குளறுபடிகள் தொடர்பான முறைபாடுகளின் இரசகியம் பேணப்பட வேண்டும் என்று சுற்றுநிரூபம் கூறுகின்றது. ஆனால் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இதுவரை அமுல்பேபிக்கு பின்னால் கையேந்தித் திரிந்த பிரதேச செயலாளர்களும், சில அலுவலர்களும் அவ்வளவு விரைவில் திருந்துவார்கள் என்று நம்புவதற்கு இடமில்லை.

எனவே முறைப்பாடுகள், முறையீடுகள், மேன்முறையீடுகள் செய்வோருக்கு அமுல்பேபியின் எடுபிடிகளால் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்புண்ணு. அந்தச் அச்சுறுத்தல் பற்றிய முறைப்பாடுகளைப் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் ஒரு வழிமுறையை சம்பந்தப்பட்டோர் முன்னெடுத்தால் நன்றாக இரக்கும்.

வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவுடன் இந்த விடயம் முடிந்து விடக் கூடாது. அமுல்பேபி அணியின எல்லாத் தவறுகளையும் ஒட்ட நறுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பார்ப்போம், ராஜபக்சர்களின் திமையை..! என குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery Gallery