யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களினால் அச்சுறுத்தல் – சந்தேக நபர்களை தேடி வலை வீச்சு!

0

கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும்.

அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.