வடக்கில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் கிடையாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சூரிய சக்தி மின் உற்பத்திகளுக்காக வடக்கிலுள்ள தீவுகளை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? எனவும், அரசின் இந்தத் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? எனவும் அந்த ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “விலைமனுக் கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்துக்கு அந்தத் தீவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.
எவ்வாறாயினும் அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்தத் தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.