யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்தவரே, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு இருதய துடிப்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். அவருடன் தொடர்புடைய சிலருக்கு கோரோனா இருந்தமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

முதல் இரண்டு தடவைகள் அவருக்கு கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. அவர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்படுத்தப்பட்டார்.

எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நபர் கடற்படையை சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பில், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை தமிழ்பக்கம் வினவியபோது, அவர் அதை மறுத்தார். சவுதியில் இருந்து வந்த நபரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.