யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா

0

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில், இலங்கைக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, “யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்மொழியை புறந்தள்ளும் ஆதரவு கருத்திற்கு கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து வலுச்சேர்ப்பதாகக் கருதப்படுகின்றது என்ற வகையில் யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகையில் 02.09.2020ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தை சுட்டிக்காட்டி மருத்துவர் சி.யமுனாநந்தா சில வரலாற்று விடயங்களை இன்று (வியாழக்கிழமை) முன்வைத்துள்ளார்.

உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில், “இலங்கையில் உள்ள இனம் மற்றும் மொழிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக்கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும். பிரச்சினைகள் என்னவோ இருக்க எந்த மொழி மூத்த மொழி என்று காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் நொந்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள்தான் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன.

இவ்வாறிருக்கையில் கர்தினாலின் இந்தக் கருத்து அவரை கத்தோலிக்கம் சார்ந்த தலைவராக அல்லாது ஒரு சிங்களத் தலைவராகவே மீண்டும் அடையாளப்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் இனம் மற்றும் மொழிசார் கட்சிகள் இருப்பது தம் பின்புலத்தை தம்பட்டம் அடிப்பதற்காக அல்ல. தாம் சார்ந்த, தம் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவே.

இவ்வாறிருக்கையில் அந்தக் கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்று கர்தினால் விடுத்துள்ள கோரிக்கை எந்த வகையறா என்று புரியவில்லை. அத்துடன், அவரது அறிவிப்பு சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறைக்கு ஓர் உந்துசக்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவிக்கையில், “உண்மையில் எபிரேய மொழியும் இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன் குமரிக்கண்டத்தில் இருந்து கடல்கோளால் புலம்பெயர்ந்த ஆதித் தமிழர்களின் மொழியே ஆகும்.

இஸ்ரேல் என்பது ‘இசை அறா அல்’ அதாவது இசையுடன் பிரிக்க முடியாத இறைவன் எனும் தமிழ்சொல்லாகும். பைபிள் என்பது ‘பைம்புல்லில் எழுதிய ஏடு’ என்ற தமிழ்சொல்லாகும்.

‘யாக்கோம்’ என்பது ‘யா-தென்திசை கோ கடவுள்’, ‘தென்திசைக் கடவுள்’ என்ற தமிழ்சொல்லாகும். யேசு என்பது தமிழ்சொல்லாகும். யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல.

‘அல் ஓய் அல் ஓய் லாமா சாவைத்தா நீ’ என்பதில் ‘அல்’ என்றால் இறைவன் என்ற தமிழ்சொல்லாகும். ‘இறைவா சாவைத்தா’ என மன்றாடுகின்றார். மேலும் பாலஸ்தீனம் என்பதும் ‘பாலைத்தீ’ எனும் தமிழ் சொற்றொடரே.

அங்கு காணப்படுகின்ற பழைய ஆலயங்களில் சிவலிங்க வழிபாடே காணப்படுகின்றது. மேலும், பைபிளில் குறிப்பிடப்படும் ‘நோவா’ என்ற படகின் கருத்தும் ‘நாவாய்’ என்ற தமிழ் சொல்லே.

எனவே, தமிழின் தொன்மைக்கு, தமிழிற்கும் எபிரேய மொழிக்கும் இடையிலுள்ள தொடர்புகளை ஆதாரமாக எடுத்துக் கூறலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.