ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்க கேடானது – மனோ கணேசன் சீற்றம்

0

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக்குழுவும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்கத் தரப்பு காட்டாமாக உள்ளார்கள் என்றும் இன்று அது அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய மனோ கணேசன் இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.