ரணில், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட சிலரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஊழல் ஒழிப்புக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08 ஆம் திகதி இவ்வாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் பியதாச குடாபாலகே ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்புக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் பியதாச குடாபாலகே ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த போது, ஊழல் ஒழிப்புக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், அனுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்ப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி துஷித் முதலிகே ஆகியோரையும் அன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.