ரிசாத் பதியுதீன் விவகாரம்! அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்

0

“நிர்வாக தடுப்பு உத்தரவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடியாது” என ஒரு அமைச்சர் இந்த அவையில் முதல் முறையாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படும் எந்தவொரு உறுப்பினரும் அது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை, நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட கூடாதென்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் நாடாளுமன்றில் பேசிய எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

“நிர்வாக தடுப்பு உத்தரவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடியாது” என்று ஒரு அமைச்சர் இந்த அவையில் முதல் முறையாக கூறியுள்ளார்.

இந்த சபையின் வரலாற்றில் இது ஒருபோதும் நடந்ததில்லை. இதுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், குறைந்தபட்சம் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்க முன், அவரது ஆசனத்தை இழந்ததில்லை.

அமைச்சர் சொல்வது ஒரு சட்டவிதியாக அமையுமாயின், மூன்று மாதங்களுக்கு யாராவது நிர்வாக ரீதியாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு அவரது நாடாளுமன்ற இடத்தை இழக்க முடியும்.

இவ்வாறான ஓர் சட்ட விதியை ஏற்றுக்கொள்ள முடியாது, பிரதமரும், ஜனாதிபதியும், என்னுடன் உடன்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறாயின் அவர்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இல்லையெனில், அரசினை எதிர்க்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து நிர்வாக ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடாமலேயே, அவரது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும். ” என தெரிவித்துள்ளார்.