ரிஷாட் உடன் தொலைபேசி கலந்துரையாடல் – சஜித் வீட்டிற்கு விரைந்தது சி.ஐ.டி

0

வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே இதுகுறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) மாலை குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் சிலவற்றை நியமித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனை, காலந்தாழ்த்தாது கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டிக்கு கட்டளையிட்டுள்ளார்.

சி.ஐ.டியின் பொறுப்பின் கீழுள்ள டி.ஐ.ஜிகளுக்கே அவர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்.