ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்?

0

உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.

அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியவில்லை.

ஐ.பி.எல். தொடரில்; பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், அவராலும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.

இந்நிலையில், டுவிட்டரில் ஏராளமான இரசிகர்கள் அவுஸ்ரேலிய சுழற்பந்துவீச்சாளர் பிரட் ஹாக்கிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தனர். அதில், ‘ரி-20 போட்டியில் யார் முதன்முதலில் இரட்டைச் சதம் அடிப்பார் எந்த நாட்டைச் சேர்ந்த வீரராக இருப்பார் என்று கேட்டிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘உலகிலேயே ரி-20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் வீரர், அதற்கு தகுதியான வீரர் என்னைப் பொறுத்தவரை அது இந்திய வீரர் ரோஹித் சர்மாதான். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

நல்ல டைமிங்கில் ஷொட்களை அடிக்கும் திறமை உடையவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிடும் திறமை உடையவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் துணைத் தலைவர் ரோஹித் சர்மா, கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரி-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடி 2,331 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். சராசரி 32.37 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 137 வைத்துள்ளார். இதில் 4 சதங்கள், 16 அரை சதங்கள் அடங்கும்.

ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டில் 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 8,010 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.