வக்பு சபையில் ஜூம்ஆ பள்ளிவாசல்களாக பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களில் ஜூம்ஆவை நடத்துவதற்கு அனுமதியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கும் அரசாங்கத்தின் வரையறைகளை கருத்திற்கொண்டு, வக்பு சபையின் மறு அறிவித்தல் வரை COVID-19 தொற்றுக் காலத்திற்கு மாத்திரம், இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூம்ஆ நடத்துவதற்கு விரும்புகின்ற அத்தகைய பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்படிவத்தை, திணைக்களத்தின் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து அனுமதி பெற வேண்டும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு,சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வௌியிட்டுள்ள வழிகாட்டல்களை பேணி ஜூம்ஆவை நிறைவேற்ற வேண்டும் என அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூம்ஆ பள்ளிகள், ஏனைய பள்ளிகள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் என்பவற்றிலும் சுகாதார அதிகாரிகள் அனுமதியளித்தால், மதரஸாக்கள், மண்டபங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஜூம்ஆவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என ஐம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.