வடக்கு மாகாண முன்னாள் முதல்வரின் கட்சியானது வடக்கில் ஒரு கொள்கையினையும் கிழக்கில் இன்னொரு கொள்கையினையும் கொண்டு செயற்பட்டுவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் பல கட்சிகள் தங்களது கட்சியின் கொள்கைகளை தெளிவாகக் கூறுவதில்லை. அரசியல் மேடைகளில் தங்களது கட்சிக் கொள்கையினைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விமர்சித்து வாக்குப்பெறவே முயற்சிக்கின்றனர்.
இவ்வாறே, வடக்கின் முன்னாள் முதல்வர், வடக்கில் தமிழ் தேசியத்தினையும் கிழக்கில் மட்டக்களப்பில் போட்டியிடுபவர்கள் அபிவிருத்தியையும் கூறிவருகிறார்கள். இவ்வாறு அந்தக் கட்சி வடக்கில் ஒரு நிலைப்பாட்டுடனும் கிழக்கில் வேறொரு நிலைப்பாட்டுடனும் எவ்வாறு போட்டியிட முடியும் என்ற சந்தேகம் எழுகின்றது.
என்றாலும், இவ்வாறான கட்சிகளைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்தக் கட்சிகளின் சின்னம் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாது.
நான் முதலில் ஒரு தவறைச் செய்து தமிழ் தேசியம்தான் தேவை என்பதை உணர்ந்து என்னுடைய ஆயுட்காலம் முழுவதும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவனாக இருக்க விரும்பி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கிறேன். இந்நிலையில் என்னை விமர்சிப்பதற்கும் அவர்களுக்கு தகுதி கிடையாது.
எனவே, தங்களுடைய சுயநல அரசியலுக்காகவும் சுயலாபத்திற்காகவும் ஒரு குறிப்பிட்டளவு நிதிக்காகவும் தமிழர்களுடைய வாக்குகளை சிதறடிக்க வேண்டாம்.
முதலில் உங்களின் கொள்கையை வடக்க கிழக்கில் உள்ள மக்களிடம் தெளிவாகக் கூறுங்கள். இவ்வாறு இருவேறு கொள்கைகளை வைத்து கருத்துக்களை முன்வைத்து வடக்கு கிழக்கை பிரித்துப் பார்க்காதீர்கள்.
இந்நிலையில், வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாடுடன் இயங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே தமிழர்களின் இருப்பினைப் பாதுகாக்க முடியும் என தமிழர்கள் திடமாக நம்புகின்றனர்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.