ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.
அதற்கமைய யாழ்ப்பாணத்திலும் இன்று முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாகவே உள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.