வடக்கு – கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் – இரா.சாணக்கியன்

0

வடக்கு – கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் பல இடங்களில் நடைபெறும் சூழலை சேதப்படுத்தும் செயற்பாடுகளை அவதானித்தோம். ஒரு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று 20 அடிக்கு மேல் கிடங்கு வெட்டி மண் அகழ்வு இடம்பெறுகிறது.

நாங்கள் சென்ற போது அங்கிருந்து வாகனங்கள் சென்று விட்டன. இதேபோல் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் பாரிய சூழலுக்கு எதிரான விடயங்கள் நடைபெறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது. அது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் நிறுத்துமாறு கோரிய போதும் இன்று வரை நிறுத்தப்படவில்லை.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வங்கியில் அதிகரிப்பை ஏற்படுத்த எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தேர்தல் வரும் போது அது பற்றி பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தல் வரும் என்று சொல்லியிருக்கின்றார். தேர்தல் வருமா இல்லையா எனத் தெரியாத நிலையில் மகாண சபை தேர்தல் தொடர்பில் பேசி பயனில்லை என்று பதிலளித்துள்ளார்.