வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதியினர் இன்று(செவ்வாய்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
அந்தவகையில் வவுனியாமா வமட்டத்தில் பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் வேலங்குளம் விமானபடைத் தளம்,பெரியகட்டு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கனடா, லண்டன், இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் கடந்த 28ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில் 310 பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வேலங்குளம் விமானப் படைதளத்தில் 206 பேரும், பெரியகட்டு முகாமில் இருந்து 104 பேருமே இதன்போது விடுவிக்கப்பட்டதுடன், அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.
இதேவளை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் அவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி, அளுத்கம, ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாண்மையின மக்களும் வடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 28 தமிழ் மக்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.