வாக்களிப்பது மனித உரிமை அது எமது கடமையுமாகும் – மட்டக்களப்பு ஆயர்!

0

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் அரசியல் சார்பற்றவன். எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவன். அரசியலுக்குப்பால் எல்லா மதங்களுக்கும் பொதுவாகவே சேவை புரிந்து வருகின்றேன்.

வாக்களிப்பது மனித உரிமை அது எமது கடமையுமாகும். சிறையிலிருப்பவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையினை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தவன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் சிரமத்தில் வாக்களிப்பதில்லை. பலரது வாக்குகள் நிராகரிக்கப்படுபவையாக ஆக்கப்படுகின்றது. இவற்றை நன்றாகக் கவனித்து வாக்களிக்க வேண்டும்.

பொதுமக்கள் நன்றாக சிந்தித்து பொருத்தமானவர்களை நீங்களே தெரிவு செய்யவேண்டும். எவ்வளவு கஸ்டமான வேலைகள் இருந்தாலும் நீங்கள் அனைவரும் கட்டாயம் நேரமொதுக்கி வாக்களிக்வேண்டும்.

நான் சிவில் சமுகத்தின் போசகராக செயற்பட்டு வருகின்றேன். இனவாதம், மதவாதம், மொழி வாதம் இருக்கக்கூடாது. அதனைத் தவிர்க்கவேண்டும். வேட்பாளர்கள் வன்முறைகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் இதனை ஊடகங்கள் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.