வாழைச்சேனை விவசாயிகள் பெரிதும் பாதிப்பு – அரச அதிகாரிகள் கவனம் இல்லை என குற்றச்சாட்டு!

0

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கின்ற நிலையில் வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பத்தொன்பது விவசாயிகள் பாரியளவிலான விவசாய செய்கையினை மேற்கொண்டு, தற்கால சூழலில் விளைச்சல் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையில் விளைச்சல் பொருட்களான கத்தரி, வெண்டிக்காய், தக்காளி, பயிற்றங்காய், மிளகாய், வெங்காயம், மரவள்ளி போன்ற பொருட்களை விற்பனை செய்வது குறைவாகவே காணப்படுகின்றது.

அதாவது களுதாவளை, தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி உட்பட்ட பல பிரதேசங்களில் இருந்து மரக்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதால் தங்களது பிரதேசங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்களில் விற்பனை செய்வதற்கும், மாவட்டங்களின் இருந்து வரும் ஏனைய விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதுடன், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.

எனவே கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கூடிய கவனம் செலுத்தி வாழைச்சேனை பிரதேச விவசாயிகள் மரக்கறி பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச விவாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.