விக்கியின் கன்னி உரையால் தெற்கு அரசியலில் பூகம்பம்!

0

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும், இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி உரையாற்றும்போது வெளியிட்ட கருத்தானது தெற்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மனுஷ நாணயக்காரக்கூட கடும் எதிர்ப்பை வெளியிட்டு, விக்னேஸ்வரனின் உரையில் இருந்து அப்பகுதியை நீக்குமாறு வலியுறுத்தினார். ராஜபக்ச அணி உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபைக்கு உறுதியளித்துள்ளேன். அது தொடர்பில் தற்போது ஆராயப்படுகின்றது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.