திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கே இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது.
மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது.
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
தமிழர்களுடையதும் இலங்கையினுடையதும் பூர்வீக புராதன சமயமான சைவத்தினுடைய ஆதி வழிபாட்டு இடமும் பாடல் பெற்ற தலமும் மாமன்னன் இராவணனுடைய காலத்திலேயே இருந்த ஈச்சரமுமான திருக்கோணேச்சரத்தை விகாரை அமைந்திருந்த இடம் எனவும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாகவும் மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் சைவத் தமிழர்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளது.
இராவணன் வெட்டு போன்ற மிகப் பண்டைய அடையாளங்களையும், பின்னர் குளக்கோட்ட மன்னனுடைய திருப்பணி செய்திகளை கொண்டதும் 1500 ஆண்டுகளிற்கு முன்னரே தாய் தமிழகத்திலேயே பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்ட திருக்கோவிலாக இருந்தமையால் அங்கிருந்தே திருஞான சம்பந்த நாயனாரால் பாடல் பெற்ற தலமாகவும் திருக்கோணேச்சரம் விளங்குகின்றது.
திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இந்த நாட்டில் ஒரு காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே எங்கும் பரந்து வியாபித்து இருந்தது. பின்னர் காலத்திற்கு காலம் அந்நியர் வருகைகளால் ஏற்பட்ட மத மாற்றங்கள் காரணமாக பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு சைவத்தின் பல புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இதேபோன்று சைவத்தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன.
இத்தனை அநீதிகள் நடைபெற்ற போதிலும் அவற்றை மீள உரிமை கோரி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் குழுமத்தை மீண்டும் மீண்டும் அனைவரும் சீண்டிப் பார்ப்பது எம் மக்களின் மனங்களில் ஆறாத் துயரை தோற்றுவிக்கின்றது.
எனவே, இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துவதை மேதானந்த தேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், உண்மையையும் மத நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அனைவரும் நாட்டின் பூர்வீக குடிகளான சைவத் தமிழர்களின் வழிபாட்டு தொன்மங்களை பாதுகாக்க உரத்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.